இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Tuesday, March 6, 2012

ஜெனிவா விவகாரம்! தமிழ் கூட்டமைப்பின் முடிவு!- தமிழ்-சிங்கள மக்களிடையே இருவேறு கருத்துக்கள்!

தற்போது ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பாக எடுத்துரைக்க அங்கு செல்வதாக முன்னர் எடுத்திருந்த முடிவை தமிழ் தேசிய கூட்டமைப்பு சில தினங்களுக்கு முன்னர் மாற்றிக் கொண்டது.
இந்த விடயத்தில் தமிழ் மக்களிடையிலும் சிங்கள மக்களிடையிலும் இரு வேறு கருத்துக்கள் இருக்கின்றன.
தமிழ் மக்களிடையே உள்ள கருத்து வேறுபாடு தெளிவாக தெரிகிறது. சிலர் அதனை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றனர். அதேவேளை, இது துரோகம் என வேறு சிலர் வர்ணிக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனே தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறி சிலர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அவரது கொடும்பாவியை தூக்கிலிட்டுள்ளார்கள்.
இந்த விடயத்தில் தமிழ் மக்களிடையிலான கருத்து வேறுபாடு தமிழர்களால் நடத்தப்பட்டு வரும் தமிழ் மற்றும் ஆங்கில இணையத் தளங்களை பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது. கூடுதலான இணையத் தளங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜெனீவா சென்றிருக்க வேண்டும் என்றே கருதுகின்றன.
சிங்கள மக்கள் மத்தியில் இந்த விடயத்தில் கருத்து வேறுபாடு இருந்த போதிலும் கூட்டமைப்பின் முடிவை ஆதரிப்பவர்கள் மட்டுமே வெளிப்படையாக கருத்து வெளியிட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தேசபக்தர்கள் என்றும் அழைக்க முற்பட்டுள்ளனர். கூட்டமைப்பின் நிலைப்பாட்டை எதிர்க்கும் சிங்களவர்கள் தமது கருத்தை வெளிப்படையாக தெரிவிக்க அச்சப்படுகிறார்கள் போலும்.
புலிகளுடனான போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அத்துமீறல்கள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது செலுத்தப்படும் நெருக்குதல் பயனளிக்கக்கூடியதாக இருந்த போதிலும் அந்த நெருக்குதல் புதிதாக இன முரண்பாட்டை தூண்டக் கூடியதாகவும் உள்ளது என நாம் இதற்கு முன்னர் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தோம். அந்தப் பிரச்சினையைத் தான் இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்நோக்கி வருகிறது.
போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுக்காக இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்பவர்கள் இரண்டு நோக்கங்களுக்காக அவ்வாறு கோருகின்றனர். போரின் போது தமிழ் தரப்பினருக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாக இலங்கை அரசாங்கத்தை பழி வாங்க வேண்டும் என்பது ஒரு நோக்கமாகும். புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையினர், சில தேசிய மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சில எதிர்க்கட்சிகள் இந்த நோக்கத்தைக் கொண்டவர்களாவர்.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக சம்பந்தப்பட்ட இரு சாராரும் பொறுப்புக் கூற வேண்டும் என்று இவர்கள் கூறி வந்த போதிலும் அரசாங்கத்தை தண்டிப்பது மட்டுமே இவர்களது நோக்கமாக இருக்கிறது.
நாட்டில் தற்போது நிலவி வரும் அமைதி நிலைமை அவர்களுக்கு முக்கியம் இல்லை. வடக்கில் பெருமளவிலான இராணுவ பிரசன்னத்தின் மத்தியிலும் தெற்கில் சிங்கள மக்கள் மத்தியிலும் வாழும் தமிழ் மக்களைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.
பொறுப்புக்கூறல் முலமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்பவர்களும் நெருக்குதல் மூலமாக பொறுப்புக்கூற வைத்தலையும் தாமாக பொறுப்புக்கூறுதலை போல் தான் கருதுகிறார்கள். எந்தவொரு நாடோ அல்லது இயக்கமோ நெருக்குதலின்றி தாமாக பொறுப்புக் கூற முன்வருவதில்லை. ஏனெனில் போரின் போது மனித உரிமை மீறுதலானது விருப்பமில்லாமலோ அல்லது தெரியாமலோ செய்பவையல்ல.
ஆனால், சில நாடுகள் தமது குற்றங்கள் உலகின் முன் அம்பலமாகிய பின் 'தாமாக' பொறுப்புக் கூற முன் வருகின்றன. அவை அம்பலமாகாதிருந்தால் அவர்களும் பொறுப்புக் கூறுவதில்லை. நல்லிணக்க ஆணைக் குழுவும் இதுகாலவரையிலான சர்வதேச நெருக்குதலின் விளைவேயன்றி வேறொன்றுமல்ல.
நெருக்குதல் இல்லாததால் புலிகளை தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டவர்களாவது புலிகளின் சார்பில் பொறுப்புக் கூற முன்வரவில்லை. ஆனால், நெருக்குதலானது சிலவேளை விபரீத விளைவுகளுக்கு இட்டுச் செல்லவும் கூடும்.
பழி வாங்கவும், நல்லிணக்கத்திற்காகவும் கங்கணங்கட்டிக் கொண்டு இருக்கும் இரு சாராரினதும் கைதியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கிறது. நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளிலும் தமிழ் மக்களிடையே கருத்துக்களை உருவாக்குவதில் பெரும் செல்வாக்குள்ள புலம் பெயர் தமிழர்களை மறந்துவிட்டு அவர்களால் செயற்பட முடியாது. அதேவேளை நாட்டில் உண்மையான நிலைமையை மறந்து செயற்படவும் அவர்களால் முடியாது.
இதற்கு முன்னர் பல விடயங்களில் வெற்றி பெற்றதைப் போலவே நல்லிணக்க ஆணைக்குழு விடயத்திலும் உலக அபிப்பிராயத்தை கட்டியெழுப்புவதில் புலம்பெயர் தமிழர்கள் வெற்றி பெறுவார்கள் என்றே தமிழ் தேசிய கூட்டமைப்பு நினைத்தது.
எனவே ஆணைக் குழு அறிக்கை வெளியாகிய உடன் அக் கட்சி அவ் அறிக்கையை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்தது. சர்வதேச சமூகம் என தம்மை வர்ணித்துக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளும் உலக அபிப்பிராயத்தை கட்டியெழுப்பக் கூடிய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆணைக்குழு அறிக்கையை நிராகரிக்கும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நினைத்தது போலும்.
ஆனால், ஆரம்பத்திலிருந்தே ஆணைக் குழுவை ஆதரித்து வந்த அமெரிக்கா ஆணைக் குழுவின் சிபார்சுகளையும் ஏற்று அவற்றை அமுலாக்க வேண்டும் என வலியுறுத்தவே 'சர்வதேச சமூகமும்' அவ்வாறே கூறத் தொடங்கியது. எனவே அதற்கு அமைய தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.
ஆணைக் குழு தமது அறிக்கையை வெளியிட்ட உடன் அதைப் பற்றிய தமது கருத்தை வெளியிட்ட அக் கட்சி ஆணைக் குழு போரினால் பாதிக்கப்பட்ட மக்களை அவமதித்துள்ளதாக கூறியது. ஆனால் ஆணைக்குழுவின் சிபார்சுகளை நிறைவேற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் சட்டபூர்வமான அபிலாஷைகளை நிரைவேற்ற முடியும் என இப்போது அக்கட்சி கூறுகிறது.
வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலை துரிதமாக அகற்றல், துணைப் படைகளால் மேற்கொள்ளப் பட்ட மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரணை செய்தல், தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமையை ஏற்றுக் கொள்ளல் உட்பட பல ஆக்கபூர்வமான சிபார்சுகளை ஆணைக் குழு முன்வைத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் கூறியுள்ளார்.
அமெரிக்கா முன்வைக்கவிருக்கும் பிரேரணை மூலம் இலங்கை அரசாங்கம் முன்னர் வழங்கிய உறுதி மொழிகளையும் அவ் ஆணைக்குழுவின் சிபார்சுகளையும் நிரைவேற்றி அதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிரைவேற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தமது முன்னைய நிலைப்பாட்டை இவ்வாறு தளர்த்திக் கொண்டு சர்வதேச நெருக்குதலில் பங்கு கொள்ள முற்பட்ட போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டு நிலைமையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அமெரிக்க பிரேரணைக்கு எதிராக அரசாங்கம் பாரிய 'தேசப்பற்று' அலையொன்றை நாட்டில் உருவாக்க முனையும் ஒரு சந்தர்ப்பத்திலேயே அக் கட்சி ஜெனீவா செல்லவிருந்தது. இலங்கையில் தேசப்பற்று என்பது சிலவேளைகளில் தமிழர் எதிர்ப்பு நிலைக்கு இட்டுச் செல்கிறது.
இந்த நிலையில் நாட்டில் வன்முறை மீண்டும் தலைதூக்கும் அபாயம் இருப்பதாகவும், தற்போதைய அமைதி நிலைமையை பாதுகாக்க வேண்டியிருப்பதாகவும் எனவே தமது கட்சி ஜெனீவாவுக்குச் செல்லவில்லை என்றும் கூட்டமைப்பு ஜெனீவா விடயமாக வெளியிட்ட அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் பொஸ்டன் குளோப் பத்திரிகையும் கடந்த பெப்ரவரி 29ஆம் திகதி வெளியிட்டிருந்த அதன் ஆசிரியத் தலையங்கத்தில் இதே கருத்தை வெளியிட்டு இருந்தது. கடந்த கால குற்றச் செயல்களுக்கான பொறுப்புக் கூறல் இலங்கையின் எதிர்க் காலத்தை அழித்துவிடக் கூடாது என அந்த ஆசிரியத் தலையங்கம் கூறியிருந்தது. தமது தோல்வியினால் வெறுப்படைந்துள்ள தமிழர்கள் சமாதான கூட்டு வாழ்க்கைக்கான வாய்ப்புக்களை கைவிடக் கூடாது என்றும் அது மேலும் கூறுகிறது.
எனவே நெருக்குதலை சர்வதேசத்திடம் கையளித்து விட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் தங்க வேண்டியதாயிற்று.
எம்.எஸ்.எம். ஐயூப்
Thanks Tamilwin